Monday, September 15, 2008

முதியோர் இல்லம் எனும் சமூகச் சீரழிவு!

மனித சமுதாயத்தின் மத்தியில் அன்பு, பாசம், அரவணைப்பு, சகிப்புத்தன்மை போன்ற உயரிய குணநலன்கள் மெதுவாகத் தேய்ந்து வருகிறது. உறவுச் சங்கிலியை அறுத்து உன்னதமான வாழ்க்கையின் பொருள் தெரியாமல் அலைந்து கொண்டிருக்கிறான் மனிதன்.
சுயநலம், சொந்த சௌகரியம் ஆகிய குணாதிசயங்கள் மனித சமுதாயத்தில் நாளுக்கு நாள் மேலோங்கி வருகிறது.
ஒவ்வொரு உயிரும் முதுமை என்ற மைல்கல்லை கடந்தே தீர வேண்டும். இதிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது என்பதை ஏனோ இந்த மனிதன் உணருவதில்லை.
முதுமை அடைந்துவிட்டால் அவர்களை எதற்குமே உபயோகப்படாத பொருளாகக் கருதி, வீட்டில் பயன்படாத குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுவது போல் ஓரங்கட்டிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற இழிவான, மனிதாபிமானமற்ற செயல் மேலை நாடுகளைவிட, உறவு முறையின் உன்னதத்தை உலகுக்கே உணர்த்திய இந்தியாவில் சர்வசாதாரண நிகழ்வாகிப் போனதுதான் இதயத்தில் ஈட்டியாய் குத்துகிறது. நாடுமுழுவதும் காளான்களாய் முளைத்திருக்கும் முதியோர் இல்லங்களே இதற்குச் சாட்சி.
2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் முதியோர்கள் எண்ணிக்கை 7 கோடியே 62 லட்சம். இதுவே அடுத்த 25 ஆண்டுகளில் 17 கோடியாக உயரும் என்பது சமூக நீதித் துறையின் கணிப்பு. தற்போதைய மொத்த முதியோரில் பாதிக்கு மேற்பட்டோர் தங்களது குழந்தைகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லங்களில் தஞ்சம் அடைந்து, பாசத்துக்காக ஏங்கி, சோகமாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இதில் 33 சதவீதம் பேர் தங்களது வாழ்க்கைத் துணையை பிரிந்து வாழ்கிறார்கள்.
பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட இன்னும் எத்தனையோ பெற்றோர்கள் விழிகளில் கண்ணீர் வழிய, விதியை நினைத்து, பித்துப் பிடித்தாற்போல் வீதிகளில் உலா வருவதைக் கண்கூடாய் காணும் போது, "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்' என்ற புரட்சிக் கவியின் வரிகள்தான் நெஞ்சில் தீப்பொறியாய் கிளம்புகிறது.
இன்று இளையவன், நாளைய முதியவன். இன்று ஒருவருக்கு பிள்ளை; நாளை மற்றொருவருக்கு தந்தை. இதுதான் மாறாத வாழ்வியல் விதி. இதை மறந்து மனம் போன போக்கிலே வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தால் நாம் செய்யும் தவறுக்கு நமது வருங்கால சந்ததி அளிக்கும் தண்டனையில் இருந்து தப்பிக்கவே முடியாது.
முதியோருக்கு பல்வேறு வழிகளில் உதவிக்கரம் நீட்டிவருகிறது மத்திய, மாநில அரசுகள். இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், முதியோருக்கு தலா ரூ.400 வீதம் மாதா மாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் பாதியாகப் பகிர்ந்து அளிக்கின்றன. முதியோர் ஓய்வூதியத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் மத்திய அரசு ரூ.703.39 கோடியில் இருந்து ரூ.836.65 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுதவிர்த்து, நாடுமுழுவதும் கூடுதலான முதியோர் இல்லங்களை நிறுவுதல், சட்டரீதியாக முதியோருக்கு பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. இது ஒருவகையில் மகிழ்ச்சி அளித்தாலும், முதியோர் இல்ல அதிகரிப்பு என்பது முதியோர் புறக்கணிப்பு அதிகரிப்பதைத்தான் காட்டுகிறது.
முதியோர்கள் வீட்டின் விலைமதிக்க முடியாத சொத்துகள்; அறிவு, அனுபவ பெட்டகங்கள் என்ற நிலை மாறி, அவர்களை சுமைகளாகக் கருதும் மனப்பக்குவம் இன்று மேலோங்கி வருகிறது. இந்த மோசமான நிலையை சமூகச் சீரழிவு என்றும், ஆரோக்கியமான சமூகத்தின் அடிமட்டத்தை செல்லரித்து விட்டது என்றேச் சொல்ல வேண்டும்.
முந்தைய தலைமுறையினர் அறிவாளிகளாகவும், ஒழுக்க சீலர்களாகவும் இருந்ததற்கு, அவர்கள் முதியோர்களின் உபதேசங்களால் ஊட்டி வளர்க்கப்பட்டவர்கள் என்பதையும், இன்றைய தலைமுறையினர் ஒழுக்கம் குறித்து கேள்வி எழுப்பும் நிலை உருவாகியுள்ளதற்கு முதியோர் உறவு துண்டிக்கப்பட்டதுமே முழுக்காரணம் என்பதை மறுத்திட முடியாது.
நமது சமூகத்துக்கென்று இருந்த தனித்த அடையாளங்களை தொலைத்து, மேலை நாட்டு மோகத்தில் நவநாகரீக வாழ்க்கை (?) நடத்திக் கொண்டிருக்கிறோம் நாம். ஆனால் பிரிட்டிஷ் குழந்தைகளோ தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்கின்றனர். இந்த மாற்றத்தை நினைத்து நாம் வெட்கித் தலைகுனியாமல் இருக்க முடியாது.
இது நமக்குத் தலைகுனிவாக உள்ளதோ இல்லையோ, சட்டத்தைக் கையில் எடுத்து, தங்களது பிள்ளைகளை நீதிமன்றத்துக்கு இழுத்து, உதவிகோரி தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகிவரும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை எண்ணி, வெட்கித் தலைகுனிவதைத் தவிர வேறுவழியில்லை.
நம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்க்கு இதுதான் நாம் செய்யும் கைமாறா? என்று ஒவ்வொரு இளைஞனும் மனசாட்சியைக் கேட்டுப் பார்க்க வேண்டும்.
நீதி. செங்கோட்டையன்

நன்றி : தினமணி

0 comments: