Thursday, September 11, 2008

வரவேற்கத்தக்க நல்ல முடிவு!

நம்நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள், வருங்கால வைப்பு நிதி (பிராவிடண்ட் பண்ட்) திட்டத்தில் கட்டாயம் உறுப்பினராகச் சேர்வதற்கு வழிசெய்யும் நடவடிக்கைகளை இந்தியத் தொழிலாளர் நலத்துறை எடுத்துவருகிறது.
இதற்கான அறிவிப்பு ஒருசில நாள்களில் வெளியாகும். இந்தியாவின் சமூகநலத் திட்டங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அல்லது ஊழியர்கள் சேருவது சட்டபூர்வக் கடமையாக்கப்படும்.
இந்திய பாஸ்போர்ட்டுகளை வைத்துள்ள இந்தியர்கள் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பி, இங்கு சில காலம் பணிபுரிந்துவிட்டு மீண்டும் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்குச் செல்வதாக இருந்தாலும், அவர்களும் இந்த திட்டத்துக்குச் சந்தா செலுத்துவது கட்டாயமாக்கப்படும்.
இந்தத் தொழிலாளர்கள் தங்களுடைய அடிப்படை ஊதியத்தில் 24%ஐ வருங்கால வைப்பு நிதிக்குச் செலுத்த வேண்டும். இதற்காக 1952ம் ஆண்டு இயற்றப்பட்ட ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவரப்படும். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இதற்கு சந்தா செலுத்துவது இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை.
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் பணிபுரிந்துகொண்டு சம்பளம் வாங்கினாலும் தாங்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறார்களோ அந்த நாட்டின் சமூகப் பாதுகாப்பு திட்டத்துக்குச் சந்தா செலுத்துகின்றனர். இதனால் அவர்களுக்குப் "பணி முறிவு' ஏற்படுவதில்லை.
இனி நமது வருங்கால வைப்பு நிதிக்கு சந்தா செலுத்தும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்களுடைய சொந்த நாட்டுக்குத் திரும்பும்போது, அவர்களுடைய கணக்கில் சேர்ந்த தொகையை முழுதாகத் தங்களுடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். பிற நாடுகளில் இப்படி அனுமதிப்பது இல்லை. குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது பணி புரிந்திருந்தால் மட்டுமே அவர்களுடைய வைப்பு நிதி சந்தாவைத் திரும்பத் தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருசில ஆண்டுகள் மட்டுமே வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் இப்படி விட்டுவிட்டு வரும் தொகையே சில ஆயிரம் கோடிகள் இருக்கும்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியத் தொழிலாளர்கள் வேலை அல்லது ஒப்பந்தம் முடிந்து அந்த நாடுகளிலிருந்து திரும்பும்போது, சமூகப்பாதுகாப்பு திட்டத்தில் அவர்கள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட சந்தாவை முழுதாகத் திரும்பப்பெற, பல்வேறு வெளிநாடுகளுடன் இந்தியத் தொழிலாளர் நலத்துறை தனித்தனியாக இருதரப்பு ஒப்பந்தம் செய்துகொள்ளப் பேசிக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் ஆலோசனை மற்றும் களப்பணிகளில் வேலை செய்யும் 80,000 இந்தியர்கள் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 6,750 கோடி ரூபாயை அமெரிக்க நாட்டின் சமூக பாதுகாப்பு திட்டத்தில் தங்கள் பங்குக்குச் சந்தாவாகச் செலுத்துகின்றனர்.
10 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர்களுடைய பணி அல்லது ஒப்பந்தம் முடிந்துவிட்டாலோ, அவர்களே ஏதாவது காரணத்துக்காக வேலையை விட்டுவிட்டு நாடு திரும்பிவிட்டாலோ இந்தத் தொகை அவர்களுக்குத் தரப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த அவல நிலையைப் போக்க பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தம் முடிந்துவிட்டது. பிரான்ஸ், ஹங்கேரி, செக். குடியரசு நாடு ஆகியவற்றுடன் பேச்சு இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சுவிட்சர்லாந்து, நார்வே ஆகிய நாடுகளுடன் இந்த மாதம் பேச்சு தொடங்கவிருக்கிறது. ஆஸ்திரேலியாவுடன் பூர்வாங்க பேச்சு தொடங்கிவிட்டது. அமெரிக்கா ஒரு குழுவையே இதற்காக அனுப்பியிருக்கிறது.
வேலைக்காக சொந்த நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குப் போவோர் எண்ணிக்கை உலகிலேயே சீனாவில்தான் அதிகமாக இருக்கிறது. அங்கு கிட்டத்தட்ட மூன்றரை கோடி பேர் வேலைக்காக வெளியே சென்றுள்ளனர். அடுத்த இடத்தை இந்தியா பிடிக்கிறது. இந்தியாவிலிருந்து 2 கோடிக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் வேலை தேடிச் சென்றுள்ளனர்.
அதே சமயம், இந்தியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர் எண்ணிக்கை 57 லட்சம். நம்ப முடிகிறதா? இருந்தாலும் உண்மை இதுதான்.
வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வோரின் நலன் கருதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கை உண்மையிலேயே அனைவராலும் வரவேற்கப்பட வேண்டியதுதான்.
நன்றி : தினமணி

0 comments: