Tuesday, August 19, 2008

அழிவின் அடையாளங்கள்!

புவி வெப்பமயமாதலின் விளைவை அனுபவிக்க உலகம் இன்னும் 100, 200 ஆண்டுகள் காத்திருக்கத் தேவையில்லை போலிருக்கிறது. நிகழ்காலத்திலேயே அதன் பலாபலன்கள் தெரியத் தொடங்கிவிட்டன.
மழை பொய்ப்பது, காலம்தவறிக் கொட்டித் தீர்ப்பது... இவை அனைத்துமே புவி வெப்பமயமாதலின் எதிரொலிதான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்தியாவின் விவசாயத்தில் தென்மேற்குப் பருவமழைக் காலம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜூனில் தொடங்கி 4 மாதங்கள் இந்தப் பருவமழை நீடித்தாலும் ஜூலை மாதத்தில் பெய்யும் மழையே அணைகளின் நீர் இருப்பைக் கணிசமாக அதிகரிக்கிறது.
ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாத மழை திருப்திகரமாக இல்லை. அத்துடன் காலம்தவறியும் பெய்தது. இதனால், பல இடங்களில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
"மத்திய நீர் ஆணையம் கண்காணிக்கும் இந்தியா முழுவதிலும் உள்ள அணைகளின் கடந்த 10 ஆண்டுக் கால நீர்இருப்பு சராசரி (ஜூலை மாதத்தில்) 52 சதவீதம். அது இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 3.5 சதவீதம் குறைந்திருக்கிறது.
தென் இந்தியாவில் உள்ள முக்கியமான 30 அணைகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 78 சதவீதமாக இருந்த நீர் இருப்பு, இந்த ஆண்டு அதே மாதம் 46.3 சதவீதமாக குறைந்திருப்பதாக' பத்திரிகைச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
தமிழகத்திலும் தென்மேற்குப் பருவமழை பொய்த்து, ஆடி மாதத்தில்கூட அக்னிபோல வெயில் கொளுத்துவதும், அணைப் பகுதியில்கூட மழையே இல்லாததும் கண்கூடு.
பெரிய அணைகள்தான் என்றில்லை... சிறிய குளங்கள், ஏரிகளும் நீரின்றி காய்கின்றன. இந்த நிலைக்கு மனிதர்களின் செயல்பாடுகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு ஒரு பூதாகரமான பிரச்னை. இதில் அரசு போதிய கவனம் செலுத்துவதில்லை.
பல இடங்களில் பஸ்நிலையம், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் போன்றவைகூட இப்படி நீர்நிலைகளை அழித்துதான் அமைக்கப்பட்டுள்ளன.
மழைவளத்தை அதிகரிப்பதற்காக மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அரசு அறிவிக்கிறது. இத் திட்டம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் திட்டம் என்றே தோன்றுகிறது. திட்டம் அறிவிக்கப்பட்டு மரக்கன்றுகளும் ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் நடப்படுகின்றன.
ஆனால், தொடர்ந்து அந்த மரக்கன்றுகளைப் பராமரிக்கத்தான் யாரும் இல்லை. திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதி எங்கே போகிறது என்பதும் தெரியவில்லை.
இது ஒருபுறம் என்றால், நதிகள் மாசுபடுத்தப்படுவது மறுபுறம். சாய ஆலைகளின் கழிவு, வீட்டுக் கழிவுகள், ஹோட்டல்களின் மிச்ச மீதிகள் என நதிகளின் மூச்சை நிறுத்தும் செயல்பாடுகள் ஏராளம். இதைத் தடுப்பதற்கான வழிகளை இன்னும் தேடிக்கொண்டே தான் இருக்கிறோம்.
தமிழகத்தின் ஜீவநதி என்றழைக்கப்படும் தாமிரபரணியில் அமலைச்செடிகளின் பெரும் ஆக்கிரமிப்பு. இதனால் பல இடங்களில் ஆறு, வாய்க்கால்போல குறுகிவிட்டது.
ஆற்றில் மணல் எடுக்க ஆர்வம்காட்டும் அரசு, இந்தச் செடிகளை அகற்றி ஆற்றை காக்கும் நடவடிக்கையை எடுக்கவில்லை என்பது வேதனை.
கவுன்சிலர்களுக்கு செல்போன் வழங்குவது குறித்து விவாதிக்கும் உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் மற்றும் விவசாயத்தின் ஆணிவேரான ஆற்றின் நிலை குறித்து கண்டுகொள்வதில்லை.
நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் தொடங்கப்பட்டு, அதன்மூலம் நல்ல பலனும் கிடைத்ததாகக் கூறப்பட்டது. அத் திட்டம் இப்போது போன இடம் தெரியவில்லை.
அதுமட்டுமன்றி, மழைநீர் மண்ணுக்குள் இறங்காதவாறு தடுக்கும் மற்றொரு செயலும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அனைத்துப் பேரூராட்சிகளிலும் தெருக்களில் தார்சாலை, சிமென்ட் சாலை போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாகனப் போக்குவரத்து இல்லாத தெருக்களில், அவசியமேயின்றி இப்படி தார்சாலை போடப்படுவதால், மண்ணில் உள்ள ஊற்றுக்கண்கள் அடைபட்டு மழைநீர் உள்ளே இறங்காமல் வீணாக வழிந்தோடிவிடுகிறது.
இதன்விளைவாக நீர்மட்டம் அடியோடு குறைந்து வீட்டுத் தோட்டங்களில் உள்ள கிணறுகளிலும், அடிகுழாய்களிலும் நீர்இருப்பு கணிசமாகக் குறைகிறது.
இத் திட்டத்தில் இப்படி ஓர் எதிர்மறை விளைவு இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இப்படி தெருக்களுக்கு தார்சாலை அமைக்க ஒதுக்கும் நிதியை மற்ற திட்டப் பணிகளுக்கு ஒதுக்கினால் பலன் கிடைக்கலாம்.
நாட்டில் நடக்கும் ஆக்கிரமிப்பு அநியாயங்கள் போதாது என்று, காடுகளிலும் மரங்களை வெட்டி அழிப்பது, வனப் பரப்பை ஆக்கிரமிப்பு செய்வது போன்ற காரணத்தால் வனப்பரப்பு குறுகி, மழைவாய்ப்பு தடுக்கப்படுகிறது.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, தொழிற்சாலை மற்றும் வாகனப் புகை, வனவளம் அழிப்பு உள்ளிட்ட இயற்கைக்கு எதிரான மனிதகுலத்தின் மறைமுகப் போர் தீவிரமடைந்துவிட்டது. அதை நிறுத்தி, சுற்றுச்சூழலைப் பேணிக்காத்தால் தான் பெய்யெனப் பெய்யும் மழை!
எஸ். ராஜாராம்

நன்றி :தினமணி

0 comments: