Tuesday, August 19, 2008

கச்சத் தீவு தீர்வல்ல...

கடந்த வாரம் மீண்டும் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இப்படி தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும் புதியதல்ல. 1974 ஆம் ஆண்டு கச்சத் தீவை இலங்கைக்கு அளிக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதுமுதல் இந்தத் தாக்குதல்கள் முதலில் எப்போதாவது என்று தொடங்கி, சமீபகாலங்களில் வாராவாரம் என்று தொடர்கிறது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அழிந்து வருகின்றன. தூத்துக்குடி துறைமுகமும், அனல் மின்நிலையமும் ஏற்பட்ட பிறகு, அந்தப் பகுதி மீனவர்கள் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகினர். முத்தெடுத்த காலம்போய், சிப்பிகூடக் கிடைக்காத அளவுக்குக் கடல்வளம் குன்றிவிட்டது.
தூத்துக்குடி அருகில் இருக்கும் முயல் தீவு ஒருகாலத்தில் மீன்களும், இறால்களும், நண்டுகளும் பெருத்துக் கிடந்த பகுதி. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு முயல் தீவைச் சுற்றி வலை விரித்தால் லாப்ஸ்டர்களும், சாளைகளும், பெளர்ணமி நண்டுகளும், கொள்ளை கொள்ளையாக அகப்படும் நிலைமை இருந்தது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சிங்கரால் அந்தப் பகுதி மீனவர்களை செழிப்புடன் வைத்திருந்த காலமொன்று உண்டு.
தூத்துக்குடி அனல் மின்நிலையம் வந்ததன் விளைவாக, சாம்பல் கழிவுகள் தண்ணீரில் கரைத்து விடப்பட்டன. முயல்தீவுவரை நீண்டு கிடக்கும் கருங்கல் தடுப்புச்சுவர் அமைத்து சாம்பல் கழிவுகள் கடலில் கரைக்கப்பட்டு அவை கடற்பாறைகள்போல உறைந்து கிடக்கின்றன. விளைவு? சாம்பல் கழிவில் காணப்படும் ரசாயனப் பொருள்களால் மீன்கள் இனப்பெருக்கமற்று அழிந்து போய்விட்டன.
சேது சமுத்திரத் திட்டத்தின் விளைவாக, விரைவிலேயே ராமேஸ்வரம் மீனவர்களும் பாதிக்கப்படப் போவது நிச்சயம். ஆஸ்திரேலியாவிலும், லட்சத்தீவு மற்றும் அந்தமான் பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் மட்டுமே காணப்படும் பவளப்பாறைகளின் வரைபடத்திலிருந்து விரைவிலேயே ராமேஸ்வரம் அகற்றப்பட்டுவிடும். பவளப்பாறைகள் போனால் அதன் காரணமாக மீன் உற்பத்தியும் குறைந்துவிடும்.
தூத்துக்குடிப் பகுதி மீனவர்களின் நிலைமைதான் சேது சமுத்திரத் திட்டத்துக்குப் பிறகு ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கும் ஏற்படப் போகிறது. துறைமுகத்தாலும், அனல் மின்நிலையத்தாலும், சேது சமுத்திரத் திட்டத்தாலும் பாதிக்கப்படுவது மீனவர்கள் வாழ்வாதாரம். கடலை மட்டுமே நம்பி, மீன்பிடிப்பது மட்டுமே தெரிந்த ஆயிரக்கணக்கான (லட்சக்கணக்கான?) மீனவர்கள் செய்யத் தொழிலின்றி அழியும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.
பிரிட்டிஷ் இந்தியாவுக்குச் சொந்தமான ஒரு பகுதியாக இருந்ததுதான் கச்சத் தீவு. சென்னை மாகாணத்தைச் சேர்ந்த மீனவர்கள் இங்கே மீன்பிடிப்பதற்கான சகல உரிமைகளையும் பெற்றிருந்தனர். இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் இங்கு வந்து வலைகளை உலர்த்தி சகோதரர்களாக இருந்த காலமொன்று உண்டு. அதெல்லாம் இப்போது பழங்கதையாகிவிட்டது.
தமிழக மீனவர்களைப் பொருத்தவரை அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தனது குடும்பத்தைக் காப்பாற்ற அவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டியாக வேண்டியுள்ளது. இந்திய எல்லைக்குள் மீன்கள் கிடைப்பதில்லை என்பதுதான் யதார்த்த உண்மை. இந்த நிலையில் நடுக்கடலில் இந்த மீனவர்கள் தாக்கப்படுவதும், எல்லை கடந்து வருகிறார்கள் என்பதும் என்ன நியாயம்?
தமிழக மீனவர்களைத் தாக்குவது நாங்களல்ல, விடுதலைப் புலிகள் என்கிற சிங்கள அரசின் விளக்கத்தில் உண்மையில்லை. பிறகு ஏன் பல தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? விடுதலைப் புலிகளை அடையாளம் கண்டு அவர்கள் ஆயுதம் கடத்துவதைத் தடுக்க முடியாமல் போனதற்கு, அப்பாவித் தமிழக மீனவர்கள்தானா பலியாக வேண்டும்? தங்களது கையாலாகாத்தனத்துக்கு, வாழ்வாதாரம் தேடி நடுக்கடலில் வலைவிரிக்கும் மீனவர்களையா பலிகடாவாக்குவது?
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன் பிடிக்கும் உரிமையைத் தமிழக அரசும், மத்திய அரசும் பெற்றுத்தர வேண்டும். அதற்கு கச்சத் தீவை மீட்பது மட்டுமே விடையாகாது. இந்தியாவைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை இந்தியா மற்றும் இலங்கைக்குப் பொதுவாக்கப்பட வேண்டும். அதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு!
நன்றி : தினமணி

0 comments: