Tuesday, August 19, 2008

யாருக்கும் லாபமில்லை!

ஆறாவது சம்பளக் கமிஷனின் பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவது என்று மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவைத் தனது சுதந்திரதின உரையில் பிரதமர் தெரிவித்திருக்கிறார். சம்பள உயர்வை ஜனவரி1, 2006 முதல் அமல்படுத்தி, கடந்த 34 மாதங்கள் அதிகரித்துத் தரப்பட வேண்டிய சம்பளத் தொகை இரண்டு தவணைகளாக இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தரப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
55 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுகிறது என்பது அந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதிலும், இதன் மூலம் தேர்தலில் தனது கட்சிக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று பிரதமர் நம்புவதிலும் நமக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை. ஆனால், இதன் தொடர் விளைவுகள் இந்தியப் பொருளாதாரத்தையும், அரசு ஊழியர் அல்லாத 90 சதவிகித மக்களையும் பெரிய அளவில் பாதிக்கும் என்பது தான் நமது வருத்தம்.
அரசு ஊழியர்களுக்கும் சரி, அதிகரித்த சம்பளம் கிடைக்கிறது என்று அடையப் போகும் சந்தோஷத்தை, அதிகரிக்க இருக்கும் விலைவாசியும், அதிகமாகத் தரப்போகும் வரிகளும் காணாமல் செய்துவிடப் போகின்றன. இந்தச் சம்பள உயர்வினால் மத்திய அரசுக்கு ஏற்படப்போகும் அதிகரித்த நிதிச் சுமை ரூ. 22,131 கோடி. ஆனால், அதில் ஏறத்தாழ 25 சதவிகிதம் வருமான வரியாகவும், 25 சதவிகிதம் மறைமுக வரிகளாகவும் மத்திய அரசுக்குக் கிடைத்துவிடும் என்று நிதியமைச்சகம் கருதுகிறது. அதாவது இந்தக் கையால் தந்து அந்தக் கையால் பறித்துக் கொள்கிறேன் என்கிறார்கள்.
மத்திய அரசின் சம்பள உயர்வால் ஏற்படப்போகும், உடனடி விளைவு, எல்லா மாநிலங்களிலும் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என்று அந்தந்த மாநில அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுக்கப் போகிறார்கள். மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளை என்பதால் அந்தக் கோரிக்கைகளை ஏற்று மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு அளிக்கப் போகின்றன மாநில அரசுகள். தமிழக முதல்வர் இப்போதே இந்த விஷயத்தில் முந்திக் கொண்டிருக்கிறார்.
மத்திய, மாநில அரசுகளின் மொத்த வருவாயில் ஏறத்தாழ 60 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை அரசு ஊழியர்களின் சம்பளம், படி, ஓய்வூதியம் என்று செலவிடப்படுகின்றன. சம்பளம் கொடுத்ததுபோக மீதமுள்ள சுமார் 30 சதவிகிதம்தான் வளர்ச்சிப் பணிகளுக்கும், சமூகப் பணிகளான கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கும் செலவிடப்படுகின்றன.
இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்போது, வளர்ச்சிப் பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியாதாரங்கள் மேலும் குறையும். அதாவது, வசதியற்றவர்களும், குறைந்த வருவாய்ப் பிரிவினரும் மேலும் பாதிக்கப்படுவார்கள். தனியார் உதவியுடன் போடப்படும் கட்டணச் சாலைகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவை அதிகரித்து, வளர்ச்சிப் பணிகளில் அரசின் பங்கு குறையும். அது சமுதாய ஏற்றத்தாழ்வை அதிகரிப்பதுடன் சட்ட, ஒழுங்கு பராமரிப்பையும் பாதிக்கும்.
தனியார் துறையில் தரப்படும் சம்பளத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தங்களுக்கு இப்போது கிடைக்கும் சம்பளம் குறைவு என்கிற அரசு ஊழியர்களின் வாதத்தில் நியாயமே இல்லை. தனியார் துறையில் இருக்கும் வேலைப்பளு இவர்களுக்கு இல்லை என்பது மட்டுமல்ல, திறமையின்மைக்கு அங்கே இடமில்லை என்பது கூடவா தெரியாது? மேலும், அரசு ஊழியர்களுக்கு இருக்கும் நிரந்தரத் தன்மையும், இதர சலுகைகளும் தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடையாதே?
தேர்தல் நேரத்தில் சம்பள உயர்வு அளிப்பது என்பது தார்மிக ரீதியாகத் தவறு. சொல்லப்போனால் இது ஓர் அரசியல் மோசடி என்று கூற வேண்டும். வாக்குக்குப் பணம் கொடுப்பதற்கு ஒப்பான விஷயமல்லவா இது! தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே சம்பள உயர்வை அறிவித்தாக வேண்டும் என்று சட்டம் வந்தால் நல்லது.
108 கோடி மக்கள்தொகையுள்ள நாட்டில் அரசு ஊழியர்கள் அதிகம் போனால் சுமார் 10 சதவிகிதம். ஆனால், அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சம்பள உயர்வால் ஏற்கெனவே அதிகரித்திருக்கும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் 90 சதவிகிதம் மக்கள் மேலும் துன்பத்துக்கு ஆளாகப் போகிறார்கள். அவர்கள் மட்டுமா? அரசு ஊழியர்களும்தான்!
தவறான நேரத்தில் வந்திருக்கும் தவறான அறிவிப்பு இது. தவறான கணக்குப் போடும் பிரதமருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பதுதான் இதன் முக்கியமான விளைவாக இருக்கும்!
நன்றி : தினமணி

0 comments: