Saturday, November 8, 2008

சாலை விபத்துகளைத் தவிர்க்க என்ன வழி?

நாளிதழ்களைப் புரட்டினாலோ, தொலைக்காட்சியைப் பார்த்தாலோ சாதாரணமாகக் காணப்படுவது சாலை விபத்துகள் பற்றிய செய்திகள்தான்.
லாரிகார் மோதல், பஸ் மீது ரயில் மோதல், சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது போன்றவை அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன.
விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களை ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் சாலை விபத்துகளைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை என்பதை உணரலாம்.
ஒரு நாளைக்கு இந்தியாவில் சராசரியாக 280 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. 2007ம் ஆண்டு புள்ளி விவரப்படி தமிழகத்தில் 59,140 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 65,726 வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன.
இதனால், உயிரிழந்தவர்கள் 12,036 பேர். காயமுற்றவர்கள் எண்ணிக்கை 83,135 பேர். தக்க நடவடிக்கைகளின் மூலம் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை நாம் பெருமளவு குறைக்க முடியும். இதனால், விலை மதிக்க முடியாத உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்.
மக்கள்தொகை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஆனால், சாலைகள் போதிய அளவு அதிகப்படுத்தப்படவில்லை. மாறாக ஆக்கிரமிப்புகளால் சாலைகள் குறுகிவிட்டன. இதனால், சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்று காரணம் கூறப்படுகிறது. அப்படியானால் நான்கு வழிப்பாதையில் விபத்துகள் ஏற்படுவதில்லையா? சாலை விபத்துகளுக்கு இவை மட்டுமே காரணம் அல்ல.
உரிமம் பெறாமல் வண்டி ஓட்டுவது, சாலை விதிகளை மதிக்காமல் செல்வது, குடிபோதை மற்றும் தூக்கக் கலக்கத்தில் வாகனங்களை ஓட்டுவது, விவேகமில்லாத வேகத்தில் செல்வது, செல்போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டுவது, பழுதுள்ள வாகனங்களை ஓட்டுவது ஆகியவற்றால் சாலை விபத்துகள் நடக்கின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
சாலை விபத்துகளைத் தடுக்க என்னதான் வழி? ஓட்டுநர் உரிமம் பெறும் நடைமுறைகளை முறையாக அமல்படுத்த வேண்டும். வாகனம் ஓட்டுபவர் அந்த வாகனம் இயங்கும் விதம் பற்றிய அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். இதனால், நாம் எரிபொருளையும் சிக்கனப்படுத்த முடியும். விபத்துக் காலங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், முதலுதவி செய்வது எப்படி என்பது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
சாலை விதிகளை மீறிச் சென்றால் அல்லது குடிபோதையில் வாகனம் ஓட்டினால் தகுந்த வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இரவு 12 மணிக்கு மேல் 4 மணிக்குள்தான் அதிகமான பெரிய விபத்துகள் நேர்கின்றன. தூக்கக் கலக்கமே இதற்குக் காரணம்.
ஆகவே, இந்த நேரத்தில் வாகனங்களை ஓட்டவே கூடாது என்று தடை விதிக்க வேண்டும். பால், நாளிதழ் போன்றவை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கும் ஆம்புலன்ல் வண்டிகளுக்கும், காவல்துறை வாகனங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கலாம்.
குறித்த நேரப்படி நீண்ட தூரம் செல்லும், உதாரணமாக சென்னைகோவைபஸ்களுக்கு இந்த நேரத்தில் ஓட்ட அனுமதி அளிக்கலாம். இதன் மூலம் குற்றங்களையும் தடுக்க முடியும்.
செல்போன் எமதர்மராஜனின் பாசக்கயிறாக மாறி வருகிறது. தற்கால சாலை விபத்துகளைப் பற்றி ஆழ விசாரித்தால் அதில் செல்போன் சம்பந்தப்பட்டிருக்கும். ஆகவே, செல்போனில் பேசியபடி வாகனங்களை ஓட்டினால் கடும் தண்டனை விதிக்க வேண்டும்.
விபத்துகளைத் தவிர்க்க வேகத்தடைகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் அமைக்கலாம். பஸ்கள் அதிக வேகம் செல்வதற்கு முக்கியக் காரணம் அதிகமான வேகத்தடைகளே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். குண்டும் குழியுமான சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும்.
வாகனங்களில் முறையான ஆவணங்கள் வைத்திருப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். இரவில் வாகனங்களின் பின்புறம் அவசியம் சிவப்பு விளக்கு எரிய வேண்டும். லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதைத் தடை செய்ய வேண்டும். அதிகப் பயணிகளை ஏற்றிச் செல்லும் வேன்கள், ஆட்டோக்கள் தடுக்கப்பட வேண்டும்.
45 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு கண்பரிசோதனை அவசியம் செய்ய வேண்டும். அதிக உயிரிழப்புகளுக்குக் காரணமான ஓட்டுநர்களின் உரிமத்தை ரத்து செய்யலாம். பள்ளிப் பாடத்திட்டத்தில் வாகனங்கள் ஓட்டும் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும். இவற்றை எல்லாம் கடுமையாக அமல்படுத்தினால் விபத்துகள் குறைவது திண்ணம்.
இ. சுப்பிரமணியம்
நன்றி : தினமணி

0 comments: