Friday, August 1, 2008

புழலா, தீவிரவாதிகளின் புகலா..?

சிறைச்சாலை என்பது தவறு செய்தவர்களைச் சீர்திருத்தும் இடம் என்பது கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் சிறைச்சாலைகள் சதித்திட்டங்கள் தீட்டவும், சமூக விரோதிகளை உருவாக்கவும், குற்றம் செய்யாமல் தவறுதலாகக் கைது செய்யப்பட்டவர்களைக் குற்றவாளிகளாக்கவும்தான் பயன்படுகிறது என்பதுதான் நடைமுறை உண்மை போலிருக்கிறது. அதிலும், சமீபகாலமாகச் சிறைச்சாலைகளில்தான் தீவிரவாதிகள் சதித்திட்டங்களைத் தீட்டுகிறார்கள் என்று கேள்விப்படும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.
சிறைச்சாலை என்பதும் சிறைத்தண்டனை என்பதும் சமுதாயத்திலிருந்து முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டு தனிமையும், கண்டிப்பும், கட்டுப்பாடுமாகக் கழிய வேண்டிய இடம் என்பதெல்லாம் பழங்கதை. இப்போது பல குற்றவாளிகள் வெளியில் இருப்பதைவிடப் பாதுகாப்புடனும் சகல செளகரியங்களுடனும்தான் சிறையில் இருக்கிறார்கள். செல்போன் முதல் ஸ்காட்ச் விஸ்கிவரை எதுவேண்டுமானாலும் அங்கிருக்கும் கைதிகளுக்குக் கிடைக்கிறது என்று சொன்னால் யாரும் ஆச்சரியப்பட வேண்டாம். அதுதான் யதார்த்த உண்மை.
ஆயுள்தண்டனைக் கைதியாக இருக்கும் நளினியை பிரியங்கா காந்தி ரகசியமாகச் சந்தித்துச் செல்கிறார். வேலூர் மத்திய சிறைச்சாலையில் எந்தவிதமான பதிவுகளிலும் அவர் கையெழுத்துப் போடவில்லை. அவர் எப்படி, யாருடைய உத்தரவின் பேரில் வேலூர் மத்திய சிறைச்சாலையில் ஒரு ஆயுள்தண்டனைக் கைதியைச் சந்தித்தார், என்ன பேசினார் என்பதை இதுவரை அரசு வெளியிடவில்லை. அதைப்பற்றி விசாரணை எதுவும் நடந்ததா என்பதும் தெரியவில்லை.
பிரியங்கா காந்திக்கு என்ன சட்டமோ அதுதானே இந்தியாவிலுள்ள ஏனைய பிரஜைகளுக்கும்! யார் வேண்டுமானாலும் போலி விலாசத்தைச் சொல்லிக் கொண்டு எந்தக் கைதியையும் சந்தித்துவிட முடியும் என்னும்போது புழல் மத்திய சிறையிலுள்ள பயங்கரத் தீவிரவாதி அலி அப்துல்லாவிடம் மொபைல் போனும், சிம் கார்டும் இருப்பதிலும், நெல்லையைச் சேர்ந்த செய்யது காசிம் என்ற ஹீரா அவனை அடிக்கடி புழல் மத்திய சிறையில் சந்தித்ததிலும் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?
பொருளாதாரக் குற்றங்களில், நிதிநிறுவன மோசடியில், அன்னிய நாட்டில் வேலைவாய்ப்பு என்று கூறி ஏமாற்றுவதில் ஈடுபடும் அனைவரும் சிறையில் ஆறு மாதம், ஒரு வருடம் கழிப்பதைத்தான் விரும்புகிறார்கள். பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள், சில லட்சங்களைச் சிறைத்துறை அதிகாரிகளுக்கும், காவலாளிகளுக்கும், காவல்துறையினருக்கும் செலவழித்துவிட்டு, மக்கள் தங்களை மறந்த பிறகு வெளியே போவதுதான் தங்களுக்குப் பாதுகாப்பு என்று கருதுகிறார்கள். இவர்கள் சிறைச்சாலையில் வாழும் ராஜவாழ்க்கை பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.
1894ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட சிறைச்சாலைச் சட்டத்தை வைத்துக் கொண்டுதான் சுதந்திர இந்தியச் சிறைச்சாலைகள் செயல்படுகின்றன. காலனி ஆதிக்கச் சட்டங்கள் என்பதால், சிறை என்பது பொதுமக்கள் பார்வைக்கு அப்பாற்பட்ட, பத்திரிகைகள் மற்றும் பொதுநல ஆர்வலர்களின் புலன் விசாரணை தடை செய்யப்பட்ட பகுதியாகத்தான் இன்றுவரை இருந்து வருகிறது.
சிறைக்குள் நடப்பதைப் படம்பிடிக்க முடியாது. கேள்வி கேட்க முடியாது. அந்த நான்கு சுவர்களுக்குள் எது நடந்தாலும் அது வெளியே தெரியாது, தெரியக் கூடாது. இந்த நிலைமை சமூக விரோதிகளுக்கும், சுயநல அதிகாரிகளுக்கும் வசதியாக இருக்கிறது. மக்களாட்சியில் யாரும் எதையும் மக்களின் பார்வையிலிருந்து மறைத்து வைக்கக்கூடாது என்பது ஏட்டில் இருக்கிறதே தவிர நடைமுறையில் இல்லை என்பதற்கு சிறைச்சாலைகள் ஓர் உதாரணம்.
221 ஏக்கர் பரப்பளவில், சுமார் ரூ. 77 கோடியில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்தின் சார்பில் "ஹட்கோ' உதவியுடன் கட்டப்பட்டிருப்பதுதான் புழல் மத்திய சிறைச்சாலை. தண்டனைக் கைதிகளுக்கு, ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று மூன்று பகுதிகளும், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் போன்றவர்களை அடைத்து வைக்க 100 தனி அறைகளும் இந்தச் சிறையில் இருக்கின்றன.
கைதிகள் எளிதில் தப்பிவிட முடியாதபடி மின்சார வேலி, 16 கண்காணிப்பு கோபுரங்கள், பாதுகாப்புப் பணியில் இரவு பகலாக 90 கமாண்டோ படையினர், மருத்துவமனை, சிறைக் காவலர்களுக்கான குடியிருப்புகள் என்று புழல் சிறையின் புகழ் இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. இத்தனை இருந்தும், தீவிரவாதிகளின் சதித்திட்டங்கள் உருவாகும் இடமாகச் சிறைச்சாலை இருந்தால் என்ன பயன்?
சிறைத்துறையின் மேலதிகாரிகள் என்னதான் திறமைசாலிகளாகவும், நேர்மையானவர்களாகவும் இருந்து என்ன பிரயோஜனம்? கீழ்மட்டத்தில் புரையோடிப் போயிருக்கும் ஊழலையும், தீவிரவாதிகள் மற்றும் சமூகவிரோதிகளுடன் நெருக்கமான தொடர்பு வைத்துக் கொண்டிருக்கும் சிறைக்காவலர்களையும் களையெடுக்காதவரை, புழலும் ஏனைய சிறைச்சாலைகளும், சமூகவிரோதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும், குற்றவாளிகளுக்கும் புகலிடமாகத்தான் தொடரும்.

நன்றி : தினமணி

0 comments: