Friday, August 1, 2008

இனிப்பான ஆபத்து!

"சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி!' என்பது போன்ற கவர்ச்சியான விளம்பரங்களோடு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டாத இனிப்புகளையும், சர்க்கரைக் கட்டிகளையும் நிறைய நிறுவனங்கள் விற்பனை செய்வதைப் பார்த்திருப்பீர்கள். உண்மையில் குளுக்கோஸ் உள்ள சர்க்கரையைப் பயன்படுத்துவதை விட, வேறு வகையான ரசாயனங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் "சுகர் ஃப்ரீ' தயாரிப்புகளால் உடலின் பல பாகங்களுக்கு மருத்துவ ரீதியாகப் பெரும் பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது, என்கின்றனர் இதைத் தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கும் வல்லுநர்கள்.
சர்க்கரை என்பது "குளுக்கோஸ்', "ப்ரக்டோஸ்' ஆகிய இரண்டும் கலந்த கலவையாகும். வெளிப்படையாக பார்த்தால் இவை இரண்டுக்கும் இடையே உருவத்தில் பெரிய வேறுபாடு எதுவும் தெரியாது.
இதில் குளுக்கோஸ் தன்மீது விழும் ஒளியின் கதிர்களை வலது பக்கமாகக் கடத்தும் தன்மையுள்ளது என்பதால் "டெக்ஸ்ட்ரோஸ்' என்றும், ஒளிக் கதிர்களை இடது பக்கமாக கடத்தும் "ப்ரக்டோஸ்', "லெவுலோஸ்' என்றும் குறிப்பிடப்படுகிறது.
பழங்களில் பெருமளவில் காணப்படும் ப்ரக்டோஸ் தனித்திருக்கும் போது இனிப்புத் தன்மை அதிகம் உள்ள பொருளாகும். ஆனால், குளுக்கோசுடன் சேர்ந்து சர்க்கரையாக உருப்பெறும்போது இதன் இனிப்புத் தன்மை குறைவாகவே இருக்கும். இவ்வாறு உருவாகும் சாதாரண சர்க்கரை உடலில் கலக்க இன்சுலின் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது லெவுலோஸ் என்ற பெயரில் உள்ள ப்ரக்டோஸ் உடலில் கலக்க இன்சுலின் தேவையில்லை என மாற்று இனிப்புப் பண்ட தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்சுலின் தேவை இல்லை என்பதையும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்னும் வியாபாரிகளின் கூற்றுகளையும் மருத்துவ ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். சர்க்கரையில் உள்ள குளுக்கோஸ் எனப்படும் டெக்ஸ்ட்ரோஸ் உடலில் உள்ள எல்லா பாகங்களிலும் எளிதாக கலக்கும் தன்மையுடையது. ஆனால், ப்ரக்டோஸ் பெரும்பாலும் கல்லீரலில் தான் கலக்கிறது. இதன் காரணமாக கல்லீரலின் அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்படும். குறிப்பாக கல்லீரலில் "லெப்டின்', "இன்சுலின்' உள்ளிட்ட ஹார்மோன்கள் வெளியேறுவது பாதிக்கப்படுகிறது. இதனால், பசியைத் தூண்டும் செல்கள் பாதிக்கப்படுவதோடு, குறைவாகச் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும்.
கல்லீரலில் ப்ரக்டோஸ் கலப்பதால் வழக்கமான ஹார்மோன்கள் வெளியேறுவது பாதிக்கப்படுவதோடு, வேறு சில தேவையற்ற சுரப்பிகள் சுரக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதனால், மாற்று இனிப்புப் பண்ட தயாரிப்பாளர்கள் கூறுவது போல இன்சுலின் தேவை இல்லை என கூறுவது சரியல்ல என்ற கருத்து வலுவடைந்து வருகிறது.
ப்ரக்டோஸை அடிப்படையாகக் கொண்டு இனிப்புப் பண்டங்களைத் தயாரிப்பவர்கள் இது "லோ கிளைசமிக் இன்டெக்ஸ்' (கர்ஜ் ஞ்ப்ஹ்ஸ்ரீங்ம்ண்ஸ்ரீ ண்ய்க்ங்ஷ்) உடையது என்றும். இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் கூறுவதை ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.
இதனால் வேறு சில கெடுதல்களும் உடலுக்கு ஏற்படும் என்பது தெரியவந்துள்ளது. "பிளாஸ்மா லிபிட்ஸ்', "யூரிக் ஆசிட்' அளவு அதிகரிக்கும். எனவே, குறைந்த அளவு மாதிரிகளைக் கொண்டு ப்ரக்டோஸை நல்லது என நம்புவது மனிதர்களின் உடல் நலத்துக்கு நல்லதல்ல என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
அதிக அளவில் ப்ரக்டோஸ் சேர்வதால் உடலில் இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கும், உடல் பருமன் அதிகரிக்கும், "லோ டென்சிட்டி லிபிட்ஸ்' போன்றவை அதிகரிக்கும். இதன் காரணமாக உடலில் கொழுப்புச் சத்து அதிகரித்து இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
சர்க்கரை நோயாளிகளுக்கு புரதச்சத்து இழப்பை ஏற்படுத்தி உடல் நல பாதிப்பை உண்டாக்குவதில் குளுக்கோஸைவிட ப்ரக்டோஸ் ஒரு விதத்திலும் குறைந்தது அல்ல என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சிறுவர்களுக்கு ப்ரக்டோஸ் அதிகமாகக் கொடுத்தால் பல் சிதைவு ஏற்படும்.
ப்ரக்டோஸ் எனப்படும் லெவுலோஸ் அடிப்படையில் தயாரிக்கப்படும் இனிப்புப் பண்டங்கள் குறித்த பரிசோதனைகள் முன்பே திட்டமிடப்பட்ட ஒரு முடிவை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், மனிதர்களின் உடல் நலத்துடன் தொடர்புடைய இத்தகைய ஆய்வுகள் உண்மையைத் தேடும் முறையில் நடைபெற்றிருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு அதிகார அமைப்பும் இதனை கடுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதே வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது.
குறிப்பிட்ட சிலரின் லாபத்துக்காக அப்பாவி மக்களின் உயிருக்கு உலை வைக்கும் இத்தகைய இனிப்புப் பண்டங்களை அரசு எப்படி அனுமதித்தது என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி?
வி. கிருஷ்ணமூர்த்தி
நன்றி : தினமணி

0 comments: