Friday, August 1, 2008

வியாபாரமா? வாழ்வாதாரமா?

""பூவா தலையா போட்டுப் பார்ப்போம். பூ விழுந்தால் நான் ஜெயித்தேன்; தலை விழுந்தால் நீ தோற்றாய்!'' என்கிற கதைதான் வளர்ச்சியடைந்த நாடுகளின் அடிப்படைச் சித்தாந்தம் போலிருக்கிறது. சமீபத்தில் தோல்வியில் முடிந்திருக்கும் தோஹாவில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் பேச்சுவார்த்தைக்குக் காரணமாக அமைந்திருப்பது இந்த மனப்போக்குதான்.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப் பிரச்னையில், அமெரிக்காவின் நிர்பந்தங்களுக்குப் பணிந்துவிட்டோம் என்கிற களங்கத்தைத் துடைக்கும்விதத்தில், தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமார் 100 வளர்ச்சி அடையும் நாடுகளைச் சேர்ந்த நூறு கோடி விவசாயிகளின் சார்பில் குரலெழுப்பி இருக்கிறார் இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத். கமல்நாத் மட்டும் தலையசைத்திருந்தால் இந்திய விவசாயம் ஒட்டுமொத்தமாக அழிந்திருக்கும் என்றுகூடக் கூறலாம்.
அப்படி என்னதான் நடந்தது உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்தில்? இந்த அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளாகவே இந்தியாவைப் போன்ற வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளும், பின்தங்கிய நாடுகளும் தங்களது இறக்குமதி விதிகளையும், அதற்கான சுங்க வரிகளையும் குறைத்து, வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருள்கள் தங்குதடையின்றி இந்த நாடுகளின் சந்தைகளில் விற்பனை செய்ய அனுமதிப்பது பற்றி விவாதித்து வருகிறது. உலகமயம் என்கிற பெயரில், வளர்ச்சி அடையாத நாடுகளின் சந்தையை வளர்ச்சி அடைந்த நாடுகள் ஆக்கிரமிப்பதுதான் இந்தப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படை நோக்கம்.
ஆனால், ஆரம்பம் முதலே இந்தியா ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்து வருகிறது. உலகமயம் என்கிற பெயரில் வெளிநாட்டுப் பொருள்களுக்கு நமது சந்தையைத் திறந்துவிடும் அதேநேரத்தில், பல்வேறு அரசு மானியம் பெற்று வளர்ச்சி அடைந்த நாடுகளில் உற்பத்தியாகும் உணவுப் பொருள்கள் குறைந்த விலையில் இந்தியச் சந்தைக்கு இறக்குமதியாவதை நாம் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதை ஏற்றுக்கொண்டால் இந்தியாவிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமே அழிந்துவிடும் என்பது மட்டுமல்ல, இந்தியாவில் விவசாயமே இல்லாமல் போய்விடும்.
""குறைந்த விலையில் உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்வதில் என்ன தவறு? விவசாயக் கூலி வேலைக்கு கிராமங்களில் ஆள் கிடைக்காத நிலையில் நாம் ஏன் விவசாயம் செய்ய வேண்டும்? லாபமில்லாத விவசாயத்தைத் தொடர்வதைவிட, அங்கே தொழிற்சாலைகளையும் குடியிருப்புகளையும் அமைத்து உணவுப் பொருள்களை வளர்ச்சி அடைந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்வதல்லவா புத்திசாலித்தனம்?'' என்கிற வாதங்களை சிலர் முன்வைக்கிறார்கள்.
ஒரு நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவுடன் இருப்பதில்தான் அந்த தேசத்தின் பாதுகாப்பே இருக்கிறது என்பதுதான் உண்மை. இறக்குமதியை நம்பி ஒரு தேசம் இருக்குமானால், அந்த நாட்டிற்கு உணவு அனுப்புவதை நிறுத்திப் பட்டினி போட்டு, அங்கே அரசுக்கு எதிராகப் புரட்சியை ஏற்படுத்தி விடலாம். கப்பலை நம்பி மக்களின் வயிறு இருப்பதுபோல ஆபத்து எதுவுமே கிடையாது. இதை அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் உணர்ந்ததால்தான் விவசாயத்துக்கு முன்னுரிமையும், விவசாயிகளுக்கு ஏகப்பட்ட மானியங்களையும் அளித்து அவர்களது உபரி உற்பத்தியை அரசே வாங்கிக் கொள்கின்றன.
வளர்ச்சி அடைந்த நாடுகள் இப்படி வாங்கும் உபரி உற்பத்தியைக் குறைந்த விலையில் வளர்ச்சி அடையும் இந்தியா போன்ற நாடுகளில் கொட்டி, அங்கிருக்கும் விவசாயத்தை நசிக்கச் செய்து தங்களது கைப்பிடியில் இந்த நாடுகளை வைக்க முயல்கின்றன. அதைத்தான் பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா எதிர்த்து வந்தன, வருகின்றன. இப்போது இந்தியாவைத் தவிர ஏனைய நாடுகளும் அடிபணிந்து விட்டதாகத் தெரிகிறது.
அதுமட்டுமல்ல. இந்தியா போன்ற நாடுகளில் இருந்து ஏற்றுமதியாகும் பொருள்களைப் பொருத்தவரை, இதே வளர்ச்சி அடைந்த நாடுகள் தடைகளை நீக்கி இருக்கின்றனவா என்றால் இல்லை. இந்த அளவுக்கு மேல் இந்த நாட்டிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்வதில்லை என்று வரம்புகள் விதித்திருக்கின்றன. இந்தியத் துணிவகைகளை இத்தனை மில்லியன் டாலர்கள்தான் இறக்குமதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா போன்ற நாடுகளில் நிபந்தனைகள் உண்டு.
""நான் செய்தது சரியா, தவறா, நான் வில்லனா, ஹீரோவா என்பதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. வளர்ச்சி அடைந்த நாடுகளில் விவசாயம் என்பது வியாபாரம். ஆனால் எங்கள் இந்தியாவில் விவசாயம் என்பது அறுபது கோடி மக்களின் வாழ்வாதாரம். அதைப் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு. எனது மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வளர்ச்சியடையும் நாடுகளில் உள்ள ஏழை விவசாயிகள் சார்பில் நான் குரல் எழுப்பினேன், அவ்வளவுதான்'' என்று கூறியிருக்கும் இந்தியத் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கமல்நாத்துக்குப் பாராட்டும் நன்றியும் கூற நாம் கடமைப்பட்டிருக்கிறோம்!



நன்றி : தினமணி

0 comments: