Friday, August 1, 2008

நம்பிக்கை சரிகிறது...!

கடந்த 22ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சிகளைச் சார்ந்த 14 எம்.பி.க்கள் அரசுக்கு ஆதரவாகவும், ஆளுங்கட்சியினை ஆதரிக்க வேண்டும் என்று தங்கள் கட்சி முடிவெடுத்து விப் எனப்படும் சட்டபூர்வமான தாக்கீது அனுப்பிய பின்னரும் 6 சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்களும் ஒரு காங்கிரஸ் எம்.பி.யும் அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மேலும் 7 கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் சபைக்கு வராமல் புறக்கணித்துள்ளனர்.
நமது நாட்டிற்கு அணுசக்தி ஒப்பந்தம் இன்றியமையாத ஒன்று. அதனைத் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியினர் எந்த ஒரு சரியான காரணமும் இல்லாமல் தேசநலனைக் கருத்தில் கொள்ளாமல் எதிர்க்கின்றனர். எனவே நாங்கள் எங்கள் கட்சியின் கட்டுப்பாட்டினையும் மீறி ஆளுங் கூட்டணிக்கு ஆதரவளிக்கின்றோம் என முடிவெடுத்து 14 எம்.பி.க்கள் செயல்படவில்லை.
அதுபோலவே அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நாட்டு நலனுக்கு எந்த நன்மையும் பயக்காமல் அது நமது நாட்டின் இறையாண்மையை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடமானம் வைக்க செய்யப்படும் ஒரு மறைமுக ஏற்பாடு எனும் இடதுசாரிக் கட்சிகளின் பிரசாரம் சரி எனும் கருத்துடன் தங்கள் கட்சியின் கட்டளையை மீறி அரசுக்கு எதிராக 7 எம்.பி.க்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. எந்த ஒரு சரியான முகாந்திரமும் இல்லாமல் 10 எம்.பி.க்கள் சபைக்கு வராமல் நம்பிக்கை ஓட்டெடுப்பு நிறைவேற மறைமுகமாக உதவியுள்ளனர்.
இவை எல்லாவற்றிருக்கும் காரணம் என்னவாயிருக்க முடியும் என்பதை, மொரீனா நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. எம்.பி. அசோக் அர்கால் சபையினுள்ளே ஒரு பெரிய பையிலிருந்து கத்தை கத்தைகளாக நோட்டுக்களை அள்ளி வீசி சாதாரண இந்தியக் குடிமகனுக்கு உணர்த்தினார்.
ஓட்டெடுப்பிற்கு சில நாட்களுக்கு முன்னரே மரியாதைக்குரிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பரதன், ஒரு எம்.பி.க்கு ரூ.25 கோடி விலை பேசப்படுகிறது என்னும் தகவலை குற்றச்சாட்டாக மக்கள் மன்றத்தில் வைத்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில் எல்லா நடவடிக்கைகளும் நடந்தேறி அகில இந்தியாவும் அதிர்ச்சிக்குள்ளாகி, ""எங்கே போகிறது இந்தியா?'' எனும் கேள்வியை நம்முன் எழுப்பி, நமது நாட்டிற்கு ஜனநாயகம் தேவைதானா? என்னும் அடிப்படைக் கேள்வியை எழுப்பியுள்ளது.
""ஜனநாயகம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் ஒரு அரசியலமைப்பு. ஏனென்றால், சரியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் அறிவு முதிர்ச்சியும் கல்வியும் பெற்றவர்கள் அல்லர் சாதாரண பெருவாரியான மக்கள்!'' எனச் சொன்னவர் இந்த உலகின் முதல் முதலாக ஜனநாயகம் பிறந்து நடைமுறையிலிருந்த கிரேக்க நாட்டின் தலைசிறந்த தத்துவஞானி பிளாட்டோ! அந்தக் காலம், அதாவது கி.மு. 430வில் ஏதென்ஸ் மாநகரின் சிட்டி ஸ்டேட் எனப்படும் நகர அரசாங்கத்தை நாம் கூர்ந்து நோக்கினால் அங்கே நேரடி ஜனநாயகம் தழைத்து நடைமுறையில் இருந்ததைக் காணலாம்.
நகர அரசாங்கம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது: மக்களாலான ஒரு அசெம்பிளி, இரண்டாவது ஒரு கவுன்ஸில், மூன்றாவதாக ஒரு நீதிமன்றம். அசெம்பிளியில் ஏதென்ஸ் மாநகரில் 30 வயதைத் தாண்டிய எல்லா ஆண்களும் உறுப்பினர்கள். அன்றைய ஏதென்ஸ் நகரில் சுமார் 3 லட்சம் பிரஜைகள். எனினும், அடிமைகள், வெளிநாட்டவர், பெண்கள், வயோதிகர், சிறுவர்கள் ஆகியோர் தவிர்த்து சுமார் 5000 பேர்கள் அசெம்பிளி உறுப்பினர்கள். அதாவது, தகுதி வாய்ந்த எல்லா மக்களும் அசெம்பிளி உறுப்பினர்களே! கவுன்சிலில் 500 உறுப்பினர்கள். இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். கவுன்ஸில் தினமும் கூடும். அரசியலமைப்புச் சட்டங்களையும், சட்டம் ஒழுங்கினையும் பராமரிக்க ஜட்ஜ்கள் அசெம்பிளியின் உறுப்பினர் மக்களிலிருந்து பெயர்களின் அகர வரிசையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 பேர்!
இதுபோன்ற நேரடி ஜனநாயகம் அதிக எண்ணிக்கையில் எல்லா மக்களுக்கும் வாக்குரிமை வழங்கிய பின்னர் நடைமுறைப்படுத்த முடியாது என்பதனால் ஏற்பட்டதுதான் மறைமுக ஜனநாயகம். நாடாளுமன்ற மறைமுக ஜனநாயகத்தில் மக்களின் பிரதிநிதிகளாக உதித்தவர்களே எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும். நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய தேசத் தலைவர்கள் அன்றைய காலகட்டத்தில் என்னென்ன வகையான தவறுகளும் சிக்கல்களும் நமது அரசியமைப்பில் உருவாகலாம் என்றெல்லாம் சிந்தித்து விவாதித்து அவற்றிற்கெல்லாம் விடைகாணும் விதமாக நமது சட்ட விதிகளையும் நடைமுறைகளையும் வகுத்தார்கள். ஆனால் அவர்களது அறிவாற்றலையும் நுண்ணறிவையும் மீறி நமது மக்கள் பிரதிநிதிகள் நடந்து வருவது சில காலமாகவே தொடர்ந்துள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், இப்போது நிலக்கரி மந்திரி பதவியை எதிர்பார்த்து அரசுக்கு சாதகமாக ஓட்டளித்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர், சிபு சோரன் ரூ.1.62 கோடி பணம் வாங்கிக் கொண்டு அன்றைய பிரதமர் நரசிம்மராவின் அரசு கவிழாத வண்ணம் வாக்களித்தார்.
1996ம் ஆண்டு சி.பி.ஐ. திடீர் ஆய்வு செய்து முன்னாள் காங்கிரஸ் மத்திய அமைச்சர் சுக்ராமின் இல்லத்திலிருந்து 3 கோடியே 60 லட்சம் ரூபாயை கைப்பற்றியது. பங்குச் சந்தை ஊழலில் பிடிபட்ட ஹர்ஷத் மேத்தா என்னும் நபர், அன்றைய பிரதமருக்கு ரொக்கமாக ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். 2001 ஆண்டு பாஜக தலைவர் பங்காரு லஷ்மணனிடம் ரூ.ஒரு லட்சம் ரொக்கமாக கொடுக்கப்பட்ட பணம் மறைத்து வைக்கப்பட்ட கேமாராக்களில் படமாக்கப்பட்டு எல்லா தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. 2005ல் நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப பணம் வாங்கியதில் கையுங்களவுமாக பல எம்.பி.க்கள் பிடிபட்டு அவையிலிருந்து நீக்கப்பட்டனர்!
இவற்றைச் சரியான முறையில் கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்க நமது சட்டங்களில் இடமில்லை. நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பெரிய தலைவர்கள் இதுபோன்ற ஊழல் அரசியல் நடவடிக்கைகளைத் தங்கள் சந்ததியினர்கள் செய்வார்கள் எனச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பொது வாழ்க்கையில் ஒழுக்கம் நமது இந்திய கலாசாரத்தில் இல்லையோ எனும் ஐயப்பாடு எழுகிறது!
நம்மோடு அலுவலகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், உயரதிகாரிகள், நமது பக்கத்து வீட்டுக்காரர், நமது நண்பர்கள் போன்றவர்கள் சிறிய காரியத்திற்காகக் கூட சொல்கின்ற பொய்கள், செய்கின்ற தில்லுமுல்லுகள் நமது பிரதிபலிப்பான எம்.பிக்களின் இதுபோன்ற முறைகேடுகளை நமக்கு விளக்குகின்றன! இதுபோன்ற மக்களின் பிரதிநிதிகள் எது போல் இருப்பார்கள் என்னும் கேள்வி எழுகின்றது. ""மக்களின் தகுதிக்கேற்ற அரசே அவர்களுக்கு'' என வின்ஸ்டன் சர்ச்சில் கூறினார்.
மறைமுக ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் மிகவும் இன்றியமையாதவை. ஒத்த எண்ணங்கள் உடைய மக்கள் ஒன்றாக சேர்ந்து கட்சிகள் உருவாகின்றன. கொள்கைகளை உருவாக்கி, அவற்றை மக்களுக்கு விளக்கிச் சொல்லி எந்த கொள்கை முக்கியமோ அதனை முன்வைத்து மக்களின் ஆதரவைப் பெற்று தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கும் அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தின் அடிப்படை!
ஆனால் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பின்னர் அதிகாரத்தை சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டு தனது கட்சியின் உறுப்பினர்களை அடக்கி வைக்க அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு நாட்டு நலன் பற்றி எந்த ஒரு அக்கறையும் இல்லாத அரசியல் தலைவர்கள் பிற்காலங்களில் உருவாகி ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக மாற்றுவார்கள் என நமது தேசப்பிதா மகாத்மா காந்தி நினைக்கவே இல்லை! அதனால்தான் அவர் காங்கிரஸாருக்கு ஒரு அறிவுரை வழங்கினார்:
""நீங்கள் பார்த்திருக்கும் மிகவும் பலவீனமான ஏழை மனிதன் ஒருவனை நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்கும் நடவடிக்கை ஏதாவது ஒரு வகையில் அவனுக்கு உதவுமா என கணக்கிடுங்கள். பசியுடன் இருக்கும் ஏழை இந்தியர்களுக்கு உங்கள் நடவடிக்கையினால் என்ன பயன் என்பதை எண்ணிப் பாருங்கள்!''
உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா எனப் பெயரெடுத்தது. அதுமட்டுமன்றி உண்மையான ஜனநாயக நெறிமுறைகள் குறிப்பாக சிறப்பான தேர்தல் நடைமுறைகள் மற்றும் பயமின்றி எல்லா விஷயங்களையும் நடுநிலையுடன் விவாதம் செய்யும் பத்திரிகைகள் உள்ள நாடு எனும் பெயரையும் பெற்ற நாடு.
சமீபகாலமாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமல் ஏற்படும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசுகள் அமைவது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த நிலையில், தங்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியாக கூட்டணி கட்சிகளின் தவறான பல கோரிக்கைகளுக்கு உட்பட்டு நன்நடத்தை விதிகளை காற்றில் பறக்கவிட்டு, மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுவது ஜனநாயகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள அனைவரையுமே வேதனைப்பட வைக்கிறது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை, பாராளுமன்ற உறுப்பினர்களின் நாணயமான நடத்தை என்பது சரித்திரம் நமக்கு போதித்த பாடம். 1774ம் ஆண்டு எட்மண்ட் பர்க் எனும் ஆங்கிலேய நாடாளுமன்ற உறுப்பினர் தன்னை தேர்ந்தெடுத்த பிரிஸ்டல் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு கூறினார்: ""உங்கள் எம்.பி. ஆகிய நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாகவும் நல்லது செய்பவனாகவும் இருப்பேன்! ஆனால், நாட்டின் நன்மைக்காக ஒரு சட்டம் இயற்றப்பட்டு அது சில வழிகளில் தொகுதி மக்களாகிய உங்களை பாதிக்குமேயானால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் நாட்டு நன்மையை கருத்தில் கொண்டு நான் அச் சட்டத்திற்கு வாக்களிப்பேன்!''
இதனைப் படித்துப் பார்த்திருப்பார்களா நமது எம்.பி.க்கள். ஒரு நாட்டின் கலாச்சாரத்திற்கு ஒத்துவராத அரசியலமைப்பும் ஆட்சிமுறையும் அந்நாட்டின் மீது திணிக்கப்பட்டால் வெற்றியடைவது சாத்தியமல்ல என திடமாக நம்புகிறார் சிங்கப்பூரின் தேசப்பிதா லீ குவான் யூ. ""ஒரு நாட்டு மக்களின் பழைய காலத்திற்கு சிறிதும் ஒவ்வாத ஆட்சிமுறை, மேலைநாடுகளில் அது வெற்றி கண்ட காரணத்திற்காக மட்டும், திணிக்கப்படலாகாது! உதாரணமாக சைனாவில் நீங்கள் ஜனநாயகத்தை புகுத்தும் முன்னர் அந்நாட்டின் 5000 ஆண்டுகள் சரித்திரத்தில் தலைகள் எண்ணப்படவில்லை என்பதனையும், அரசர்கள் வைத்ததுதான் சட்டம், கீழ்ப்படியாதவர்களின் தலைகள் கொய்யப்படும் என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்! மேலைநாடுகளின் ஆட்சிமுறைக்கு ஆசிய மக்கள் தயாராக இல்லை!'' எனக் கூறினார் அவர்.
ஆண்டாண்டு காலம் அடிமைகளாக வாழ்ந்த நமக்கு சுதந்திர ஜனநாயக ஆட்சிமுறை சரிப்பட்டு வராதோ எனும் பயங்கலந்த சந்தேகம் சமீபகால சம்பவங்களால் ஏற்படுகிறது.

என். முருகன்
(கட்டுரையாளர்: ஓய்வுபெற்ற ஐ.ஏஎஸ். அதிகாரி)
நன்றி : தினமணி

0 comments: