Friday, August 1, 2008

இந்திய ஜனநாயகம் பிழைக்குமா?

நாடாளுமன்றத்தில் தனது அரசின் மீதான நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வெற்றி கிடைத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றியாகவும் கருதப்படுகிறது.
இந்த வெற்றிக்குக் கொடுக்கப்பட்ட விலை மிகப்பெரியது. கை மாறிய பணப்பெட்டிகளை நான் குறிப்பிடவில்லை. மாறாக நாட்டின் உன்னதமான ஜனநாயக மரபுகள் பலி கொடுக்கப்பட்டுவிட்டதைக் குறிப்பிடுகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்களை வசப்படுத்த திரைமறைவில் நடைபெற்ற பேரங்கள் அளிக்கப்பட்ட ரகசிய வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியின் மரியாதையை மட்டுமல்ல, நாட்டின் மரியாதையை அடியோடு அழித்துவிட்டன.
மிகப் பழைமை வாய்ந்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஜனநாயகமே இளம் இந்தியாவுக்கு ஏற்றது என ஜவாஹர்லால் நேருவும் மற்ற தலைவர்களும் உறுதியாக நம்பினர். அதை ஏற்று இந்தியாவில் நடைமுறைப்படுத்தி உன்னதமான ஜனநாயக மரபுகளுக்கு நிலையான அடித்தளம் அமைத்தனர். சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தியடிகள் தலைமையில் தொண்டு துன்பம் தியாகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தூய்மையான அப்பழுக்கற்ற பொதுவாழ்வுக்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தலைவர்கள் உருவாக்கிய சிறந்த மரபுகள் இப்போது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.
இந்தியாவைச் சுற்றியுள்ள பல்வேறு நாடுகளில் ஜனநாயகம் மறைந்து சர்வாதிகாரம் தலைதூக்கியது. எடுத்துக்காட்டாக இந்தோனேசியாவின் சுதந்திரப் போராட்டத் தளபதியாக இருந்து அம்மக்களை வழிநடத்தி வெற்றி கண்ட சுகர்ணோ, தான் சாகும் வரை தானே அந்நாட்டின் குடியரசுத் தலைவர் என்பதை அரசியல் சட்டத்திலேயே இடம்பெறச் செய்தார். சர்வாதிகார நாடுகளுக்கு நடுவே இந்தியா ஒரு ஜனநாயகப் பசுஞ்சோலையாகத் திகழ்ந்தது.
நேரு விரும்பியிருந்தால் அவரும் அவ்விதமே செய்து கொண்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்ய அவர் விரும்பவில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் தொகுதிக்குச் சென்று அந்த மக்களிடம் வணங்கி வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் செல்வதை தனது கடமையாகக் கொண்டிருந்தார். நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்கள் நடக்க வழிவகுத்து ஜனநாயகத்தைப் பரிமளிக்கச் செய்தார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இருந்த அம்பேத்கர், எஸ்.ஏ. டாங்கே, ஹிரேன் முகர்ஜி, பூபேஷ் குப்தா, ஏ.கே. கோபாலன், சியாம பிரசாத் முகர்ஜி, கிருபளானி, லோகியா, மதுலிமாயி, என்.ஜி. ரங்கா, ஏ. கிருஷ்ணசாமி, இரா. செழியன், எம்.ஆர். மசானி, பிலுமோடி போன்ற தலைவர்கள் தங்களின் வாதத் திறமையால் ஜனநாயகம் தழைக்கப் பெரிதும் உதவினார்கள்.
1962ஆம் ஆண்டு சீனப்படையெடுப்புக்குப் பிறகு நேரு அரசின் மீது முதன்முதலாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் நேருவின் நெருங்கிய தோழர்களாக இருந்த கிருபளானி, லோகியா போன்றவர்கள் மிகக்கடுமையாக விமர்சனம் செய்தபோதுகூட நேரு கோபமடையவில்லை. நாடாளுமன்றத்திற்கு வெளியே ராஜாஜி ""நேரு பதவி விலக வேண்டும்'' என்று மிகக் கடுமையான தாக்குதலை நடத்தினார்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இத்தகைய விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவை மட்டுமல்ல, ஆட்சித் தேர் தடம் மாறாமல் செல்ல உதவும் காரணிகள் என்பதை உண்மை ஜனநாயகவாதியான நேரு தெளிவாக உணர்ந்திருந்தார். எதிர்க்கட்சிகளின் முயற்சிகளை... முறியடிக்க இழிவான வழிமுறைகளை அவர் ஒருபோதும் கடைப்பிடிக்கவில்லை. சொல்லாலும் செயலாலும் உண்மையான ஜனநாயகவாதியாகத் திகழ்ந்தார். இந்திய ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு அவரின் இந்தப் பண்பு நலன்களே பெரிதும் காரணங்களாக இருந்தன.
1964ல் நேரு மறைந்தபோது அவர் ஏந்தியிருந்த ஜனநாயக தீபத்தை உயர்த்திப் பிடிக்க பெருந்தலைவர் காமராஜர் முன்வந்தார். நேருவுக்குப் பின் யார் என்ற கேள்வி விசுவரூபம் எடுத்தது. இந்தியப் பெருந்தொழிலதிபர் ஒருவர் பணமூட்டைகளுடன் தில்லியில் வந்திறங்கி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துப் பேசத் தொடங்கினார். செய்தியறிந்த காமராஜர் அவரை அழைத்து எச்சரிக்கை செய்தார். ஜனநாயகத்தைக் கறைப்படுத்த முயன்ற அவர் அஞ்சி ஒதுங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் அழைத்துப் பேசி கருத்தறிதல் முறையின் மூலம் நேருவுக்குப் பின் லால்பகதூர் பிரதமராகத் தேர்ந்தெடுக்க வழிகோலிய பெருமை காமராஜரைச் சாரும்.
லால் பகதூர் மறைந்தபோது இந்திராவுக்கும் மொரார்ஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தவிர்க்க வேண்டுமானால் காமராஜரே பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என மொரார்ஜி உள்பட பல தலைவர்கள் வற்புறுத்திய போதிலும் காமராஜர் ஏற்கவில்லை. பதவி, பண பேரங்களின் தலையீடு இன்றி ஜனநாயக ரீதியில் இந்திரா தேர்ந்தெடுக்கப்பட உதவினார்.
மிக நெருக்கடியான காலகட்டங்களில் ஜனநாயகப் பயிர் அழிந்துவிடாமல் காத்த பெருமை காமராஜருக்குரியது.
ஆனால் தங்களுக்குப் பிறகும் இந்நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைத்து நிற்க வேண்டுமென நேரு, காமராஜர் ஆகியோர் கண்ட கனவு இன்று சுக்குநூறாகச் சிதறியிருக்கிறது.
1975ஆம் ஆண்டில் நேருவின் மகளான இந்திரா காந்தி தடம் மாறினார். ஜனநாயக ரீதியில் எழுந்த எதிர்ப்புகளைச் சந்திக்க இயலாமல் அவசர கால நிலையைப் பிரகடனம் செய்து சர்வாதிகாரம் படர வழிவகுத்தார்.
அரசியலில் இருந்து விலகி சர்வோதயத் தொண்டு புரிந்து கொண்டு இருந்த ஜெயப்பிரகாச நாராயண் ஜனநாயகப் பயிரைக் காக்க முன்வந்து துணிந்து போராடினார். மக்கள் அவருக்குப் பின்னால் அணிதிரண்டனர். மீண்டும் ஜனநாயகம் ஆட்சிபீடம் ஏறியது.
பிரதமர் ராஜீவ் காலத்திலும் எதேச்சதிகாரபோக்கு தலைதூக்கியது. போபர்ஸ் ஊழல் பிரச்னையில் உண்மைகளை ராஜீவ் அரசு மூடி மறைத்ததைக் கண்டிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகிய அவலம் நிகழ்ந்தது.
பிரதமராக வி.பி.சிங் பதவியேற்றபோது மண்டல் பிரச்னையை முன் வைத்து அவரது அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்தபோது தவறான வழிகளைக் கையாண்டு பதவியில் நீடிக்க அவர் விரும்பவில்லை.
அவருக்குப்பின் காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமராகப் பதவியேற்ற சந்திரசேகர் காங்கிரஸின் நியாயமற்ற நிர்பந்தங்களுக்குப் பணிய மறுத்துப் பதவி விலக முனைந்தாரேயொழிய எப்படியாவது பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென விரும்பவில்லை.
பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது தனது அரசைக் காப்பாற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அது அம்பலமான விவகாரம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது.
பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது பாஜக தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன், சமதா கட்சித் தலைவராக இருந்த ஜெயாஜெட்லி மற்றும் 31 பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் ஆயுத பேரம் தொடர்பாக பணம் பெற்றதை தெஹல்கா செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியது. 2005ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதற்கு 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதை ஸ்டார் செய்தி நிறுவனம் ஆதாரப்பூர்வமாக வெளியிட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள் பட்டியலும் பத்திரிகைகளில் வெளியானது.
மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் நமது நாடாளுமன்ற ஜனநாயக மரபுகள் நாளுக்கு நாள் சீர்குலைந்து வந்ததை எடுத்துக்காட்டுகின்றன.
மாநில சட்டமன்றங்களில் பதவிக்காகவும், பணத்திற்காகவும், கட்சி தாவுகின்ற போக்குகள் மலிந்திருந்தன. அண்மைக்காலமாக நாடாளுமன்றத்திலும் இந்த நோய் பரவிவிட்டது.
நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகளில் மிகப் பெரும்பான்மையான கட்சிகளிலிருந்து பலர் மன்மோகன் அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள். பாஜகவிலிருந்து 7, ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து 3, மதிமுகவிலிருந்து 2, தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதாதள், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிலிருந்து தலா ஒருவர் வீதம் கட்சி மாறி வாக்களித்திருக்கிறார்கள். ஆக பதவி பண பேரங்களுக்கு இரையாகாத கட்சிகளே இல்லை என்ற நிலை உருவாகியிருப்பது ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கு அறிகுறியாகும்.
பல்வேறு கட்சிகளிலிருந்து உறுப்பினர்களை வலைவீசிப் பிடித்ததைப் பெரும் சாதனையாகக் கருதி காங்கிரஸ் தலைவர்கள் கொண்டாடுகிறார்கள். தங்கள் கட்சியிலிருந்து ஏற்கெனவே விலக்கப்பட்ட ஹரியாணா உறுப்பினர் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் கட்டுப்பாடாக அரசுக்கு வாக்களித்ததையும், எதிர்க்கட்சியான பாஜகவிலிருந்து பலரைக் கட்சி மாறி வாக்களிக்க வைத்ததையும், இரட்டிப்பு வெற்றியாகக் காங்கிரஸ்காரர்கள் கருதுவது நேரு வகுத்த சிறந்த ஜனநாயக மரபுகளிலிருந்து விலகிச் செல்வதாகும் என்பதை அவர்கள் உணராததையே காட்டுகிறது.
இதன் விளைவாக வரவிருக்கும் அபாயத்தை அவர்கள் கொஞ்சமும் உணரவில்லை. அம்பானி போன்ற பெருந்தொழிலதிபர்களின் உதவியின் மூலம் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை விலைக்கு வாங்கியது நாளை தங்களுக்கும் எதிராகத் திரும்பும் என்ற உண்மையைக் காங்கிரஸ்காரர்கள் உணர வேண்டும்.
அமர்சிங் போன்ற, சந்தர்ப்பவாதிகளின் மூலம் காங்கிரஸ் கட்சியின் அதிகார மையத்திற்குள் அம்பானிகள் ஆதிக்கம் பெற்றுவிட்டார்கள் என்பது அப்பட்டமான உண்மையாகும்.
கொள்கை அடிப்படையில் இடதுசாரிகள் மட்டுமே கட்டுப்பாடாக நடந்துகொண்டு வாக்களித்துள்ளனர். ஆனாலும் கட்சி சார்பற்றவரான சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மீது நடவடிக்கை எடுத்ததன் மூலம் உயர் பதவிக்குரிய கண்ணியத்தையே காற்றில் பறக்கவிட்டு ஜனநாயக மரபுகளுக்கு இடதுசாரிகள் சேதம் விளைவித்துள்ளனர்.
மத்திய அரசின் வெற்றிக்கு உதவிய பல்வேறு சிறு கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குப் பரிசாகப் பதவிகளைப் பங்கு போடுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வீழ்ந்துவிட்ட ஜனநாயகப் பிணத்தைக் கொத்தித்தின்ன பதவிக்கழுகுகள் தில்லியில் மொய்த்துள்ளன.
இந்திய ஜனநாயகம் பதவிநாயகமாகவும், பணநாயகமாகவும் மாறிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் அரசு அமைப்பது, கவிழ்ப்பது ஆகிய எல்லாமும் பணநாயகத்தின் உதவியில்லாமல் நடைபெறாது. இந்தப் போக்கு இறுதியாக சர்வாதிகாரத்தில் போய் முடியும்.
இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியான முசோலினி ஜனநாயகம் பற்றி கூறியதுதான் இப்போது நினைவுக்கு வருகிறது. ""ஜனநாயகம் என்பது மன்னர்கள் இல்லாத ஆட்சி முறையாகும். ஆனால் மன்னர்களைவிட கொடிய எதேச்சாதிகாரப்போக்கும் அழிவு சிந்தனைகளும் நிறைந்த பல மன்னர்களைக் கொண்டதே ஜனநாயகமாகும். உண்மையான சர்வாதிகாரிகளைவிட இவர்கள் மோசமானவர்கள்.''
பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி

0 comments: